History of The School

பாடசாலையின் வரலாறு

நல்லுளம் கொண்டு நயம்பட உரைக்கும் நற்சொல்லின் செல்வராகவும் நாணயம் தவறாத நற்குடியின் புரவலராகவும் விளங்கிய நாகமுத்து அருணாசல உடையார், அளவெட்டிக் கிராமத்துக்கு மட்டுமல்லாமல் அயல்கிராமங்களுக்கும் கல்விக் கண் கொடுத்த பெரியார். அளவெட்டிச் சிறுவர்கள் மெய்வருத்தம் பாராது ஆங்கிலக் கல்வி பெறுவதற்காக பல மைல் தூரம் நடந்து சென்று கல்வி கற்று வருவதைக் கண்ட அருணாசலவுடையார். இக்குறையை எப்படி போக்கலாம் என்று சிந்தித்திருக்கும் வேளையில் ஆறுமுகநாவலர் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துப் பணம் படைத்திருந்த பெரியோர்களை “ஏழைச் சிறுவர்களுக்குப் பாடசாலைகளை அமைத்துக் கொடுக்குமாறு” விடுத்த அழைப்பினை எண்ணி இரவு பகல் துஞ்சாது சிந்தித்தார்.

“இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்”

என்ற சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றுக்கமைய ஏழைகளின் கல்விக்குப் புத்துயிரளிக்க எண்ணி “நீரோங்கு வயலினோடு சோலை சூழும் நிறை அறிவின் பெரியார் நீர்மை சான்ற அளவில்லாத புகழுடைய அளவெட்டி மண்ணில் திரு நாகமுத்து அருணாசல உடையார் இரண்டு பாடசாலைகளை அமைக்கும் பணியில் முன்னின்று உழைத்தார். அளவெட்டி கிராமத்தில் நான்கு கிறிஸ்தவ பாட

சாலைகள் இருந்தமையைக் கண்டு மனம் நொந்து சைவத்தை வளர்க்க எண்ணிய அருணாசல உடையார் 1894ஆம் ஆண்டு ஒரு நல்;;முகூர்த்தவேளையில் இரு பாடசாலைகளை அமைக்க எண்ணி அதற்கு அத்திபாரமிட்டார்.

இன்று நன்மணம் கமழும் நாற்றிசைதோறும் நற்புகழோடும் பெயரோடும் விளங்கும் அருணோதயக் கல்லூரி அன்று அளவெட்டி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையாக எழுந்து நின்றது. மற்றையது நாகபூசணி வித்தியாலயமாக மலர்ந்து இன்று நல்லார் மனமெல்லாம் கலந்து நிற்கும் அருணாசல வித்தியாலயமாக நிற்கின்றது.

பாநலன் கண்டின்புறும் பண்பாளராகவும் நல்லொழுக்கமும் கண்ணியமும் உடைய சைவாசாரசீலராகவும் விளங்கியவர் அருணாசல உடையார். தன்னலம் கருதாது பொதுநலனே பெருநலன் எனக்கொண்டு காரியமே கண்ணாய் இருந்து செயற்படும் கர்மயோகி. அருணாசல உடையார் அவர்கள் செவ்வனே கசடறக் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் நிலத்தையும் ஓலைக் கொட்டில்களையும் உபகரித்து மு.செல்லப்பாச்சட்டாம்பியார், அ.பரமுச்சட்டாம்பியார் போன்ற ஆசிரியர்களையும் நியமித்து அவர்களுக்கு போதிய வேதனங்களையும் வழங்கி இப்பாடசாலையை நடாத்தி வந்தார். உடையார் ஆங்கிலம் கற்றவர். அரச உத்தியோகம் வகித்தவர். தமிழிலும் சமயத்திலும் பாண்டித்தியம்மிக்கவர். வேதாந்த சித்தாந்த சமரச ஞான நன்னிலை கைவரப்பெற்றவர். திருக்கோயில்களில் நடைபெறும் புராண படலங்களை ஓதுவதிலும் பங்கெடுப்பவர். ஞானம் கைவரப்பெற்ற அருணாசல உடையார் காலில் குமிழி மிதியடியும் தோய்த்துலர்ந்த வெள்ளை வேட்டியும் சால்வையுமாய் நாள்தோறும் பள்ளிக்கூடம் சென்று ஞானசாஸ்திரங்களைக் கற்பிப்பதிலும் விளக்குவதிலும் ஈடுபட்டார்.

மு.செல்லப்பாச்சட்டாம்பியார் தனித்தே கல்வி கற்பித்தார். இவர் ஆழ்ந்த தமிழறிவும் இசைவன்மையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். இவரைப் போலவே நற்குண நற்செய்கைகள் உடையவராகவும் ஆசாரசீலராகவும் விளங்கியவர் அ.பரமு சட்டாம்பியார். மாணவர்கள் நன்றாக கற்கவேண்டும் என்ற நோக்கில் அயராது உழைத்தார். 1919ஆம் ஆண்டு வரை இவ்விரு பாடசாலைகளினதும் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். தினமும் பாடசாலைக்குச் சென்று தான் கற்ற ஞான சாஸ்திரங்களையும் புராணங்களையும் மாணவருக்கும் போதித்தும் பயன்சொல்லியும் வந்தார்.

தமிழ்கலாசாலையாக இருந்த அருணோதயக்கல்லூரி திரு குழந்தைவேலுச் செட்டியார் மகன் சின்னத்தம்பிச்செட்டியாரைத் தலைமையாசிரியராகப் பெற்று ஓர் ஆங்கிலப் பாடசாலையாயிற்று. செட்டியார் நடுத்தர உயரமும் பொலிவான தோற்றமும் உடையவர். தூயசிந்தனையும் மனிதநேயமும் மிக்கவர். தினமும் கும்பளாவலைப் பிள்ளையாரைத் தொழுதுவிட்டு திருநீற்றுப்பூச்சுடன் கூடிய நெற்றியில் சந்தனப்பொட்டுத் துலங்க தோய்த்துலர்ந்த வேட்டியும் அங்கவஸ்திரமாய்; பாடசாலைக்கு அவர் வலம் வரும் காட்சி ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயபக்தியைக் கொடுக்கும்.இவர் சென்னைப்பட்டினத்தில் ஆங்கிலக் கல்வி கற்று மன்னாரில் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தவர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தியோகத்தைக் கைவிட்டு அளவெட்டியில் வந்து வசிக்கலானார். அக்காலத்தில் பலரும் கேட்டுக் கொண்டமைக்கிணங்க அளவெட்டி ஆங்கில வித்தியாசாலையின் முதலாவது தலைமையாசிரியரானார். ஆங்கில அறிவும் தமிழறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவராகச் செட்டியார் விளங்கியமையால் மாணவர்களாலும் ஊராராலும் மதிக்கத்தக்கவராகச் செட்டியார் விளங்கினார். அவருடைய காலத்தில் அரசாங்கம் முதற்றர நன்கொடை, இரண்டாந்தர நன்கொடைகளைப் பாடசாலைகளுக்கு வழங்கியது. செட்டியார் மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை கொண்டவர். அவர்களின் உயர்ச்சியே தன் வாழ்வின் உயர்ச்சி என எண்ணிக் கருமமாற்றியவர். எப்பொழுதும் திறமையாகக் கற்பிக்கும் ஆசிரியராகவும் செட்டியார் விளங்கியமையால் மாணவர்கள் பலர் சோதனையில் திறமைச் சித்தியெ பெறுவர். இதனால் பாடசாலைக்கு முதற்றர நன்கொடையே தொடர்ந்தும் கிடைத்தது.

செட்டியார் ஒருநாள்; பிறந்த இடமான வண்ணார் பண்ணைக்குச் சென்று அங்கு தங்கி அடுத்தநாட் காலை சுன்னாகம் குறுக்குப் பாதை ஊடாக அளவெட்டியில் உள்ள தம் பாடசாலையை நோக்கி நடக்கலானார். தாகமும் பசியும் அவரை வருத்தியது. வீட்டுக்குச் சென்று உணவருந்தி விட்டு வரலாம் என்ற எண்ணம் கைகூட அவருடைய கடமை உணர்ச்சியும் மாணவர் மீது அவர் கொண்டிருந்த அதீத அக்கறையும் அவரைத் தடுத்தது. ஈற்றில் கடமை வெல்ல பாடசாலைக்குத் திரும்பிய சின்னத்தம்பிச் செட்டியார் தன் பணியில் ஈடுபட்டார். அன்று சிறிது நேரத்தின் பின் வந்த ‘லெம்பிறிகென்’ என்ற கல்விப் பகுதி பரிசோதகர் மாணவர்களைப் பரீட்சித்துப் பார்த்தார். அவருடைய பரிசோதனையில் மாணவர்கள் சிறந்த பேறினைப் பெற்றதால் அதிகாரி மகிழ்ச்சியடைந்து அன்றைக்கே இப்பாடசாலையை உதவி நன்னொடை பெறும் பாடசாலையாகப் பதியப்படலாமென வித்தியாபகுதிக்கு அறிவித்தார். செட்டியாரின் தகை சான்ற உழைப்பினாலும் நனி சிறந்த கடமை உணர்ச்சியால் இப்பாடசாலை பேரோடும் புகழோடும் விளங்கியது. இவருடைய திறமையை நன்கறிந்த ‘வன்கயிலன் பேக்’ என்ற பரிசோதகர் “வடபாகத்தில் முதலிடம் வகிக்கும் ஆரம்ப பாடசாலை இது” என அறிக்கையிட்டார். இவ்விதமாக ஐந்தாம் வகுப்புவரை திறமையுடன் கற்பித்தவர்களாக திரு அ.பொனனம்;பலம், திரு க.இளையதம்பி, திரு க.அப்பாக்குட்டி முதலான ஆசிரியர்களைக் கூறலாம். உடையார் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்டு வந்த இப்பாடசாலை சிறிது காலத்தின் பின் செட்டியாருடைய பாடசாலை என அழைக்கப்பட்டமைக்கு செட்டியாருடைய கடமையுணர்வும் அர்ப்பணிப்பும் வழிகோரின.

செட்டியார் அவர்கள் இளைப்பாறிய பின் சிலகாலம் திரு க.குமாரசாமி அவர்களும் திரு க.முத்துச்சாமி அவர்களும் கடமையாற்றினார். இவர்களுக்குப்பின் சண்டிலிப்பாயில் இருந்து வந்த திரு க.சோமசுந்தரம் டீ.யு அவர்கள் 1913ஆம் ஆண்டளவில் தலைமையாசிரியர் ஆனார். நல்லவராகவும் வல்லவராகவும் விளங்கிய க.சோமசுந்தரம் உருவத்தில் சிறியவராயினும் குணத்தாலுயர்ந்தவர். ஆழ்ந்த அறிவும் கடமையுணர்ச்சியுமுடையவர். பாடசாலையில் கடமையாற்றிய சிலகாலத்துக்குள்ளேயே கிராமத்தவர்களின் நன்மதிப்பை பெற்றார்.

திரு க.சோமசுந்தரம்

பாடசாலையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்தாயிருந்து இப்பாடசாலையை ஆறாம் ஏழாம், எட்டாந்தரம் வரை மாணவர்கள் கல்வி கற்கலாம் என்ற நிலைக்கு உயர்த்தினார். இக்காலப்பகுதியில் இப்பாடசாலைக்கு உறுதுணையாக நின்ற நல்லாசிரியர்களாக திருவாளர் வு.ஏ..செல்லப்பா, திரு த.தியாகராசா, திரு இராசையா, திரு வீ.பாலசுந்தரம், திரு சீ.இளையதம்பி, திரு மு.வயிரமுத்து, திரு அ.வைத்தியலிங்கம், திரு கே.கென்ஸ்மன், திரு த.சின்னத்தம்பி, திரு த.செல்லையா, திரு ப.மு.செகராசசிங்கம், திரு ச.மயில்வாகனம், திரு க.சற்குணசிங்கம் முதலானவர்களைக் கூறலாம். இவர்களின் உன்னத சேவையினால் இப்பாடசாலை கலாசாலை அளவெட்டி ஆண்கள் உயர்தர பாடசாலையாகத் தரமுயர்ந்தது. 1919ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திரு சோமசுந்தரம் அவர்கள் மாற்றலாகி மானிப்பாய் இந்துக்கல்லூரிக்குச் செல்ல இப்பாடசாலைக்கு புதிய அதிபராகத் திரு த.சின்னத்தம்பி அவர்கள் உள்வாங்கப்பட்டார். ஆற்றல்மிக்க அதிபரான சின்னத்தம்பி அவர்கள் கடமையேற்று சிலகாலத்தின் பின்னர் புதிய கல்விமுறைகள் பாடசாலையில் அறிமுகம் செய்யப்பட்டன.

 

மாணவ முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. நல்லாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரமும் உயர்ந்தது. புதிய கல்வித்திட்டங்களை உள்வாங்கிய பாடசாலை, அதிபர் அவர்களின் சிரத்தையான உழைப்பினால் வடபகுதியில் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. திரு த.சின்னத்தம்பி (கணபதிப்பிள்ளை உபாத்தியாயர்) ஆசிரியர் கருமமே கண்ணாகவும் பாடசாலையே வாழ்வாகவும் கொண்டு இதனைச் சாதித்தார்.

திரு. த.சின்னத்தம்பி

நல்ல ஒழுக்க சீலர்களை உருவாக்கிய இப்பாடசாலை இக்காலப்பகுதியில் பண்பாட்டு விழுமியங்களின் நிலைகளனாகவும் திகழ்ந்தது. இதற்கு சுழிபுரம் ஸ்ரீ இராசையா சுவாமிகளின் திருப்பார்வையும் ஸ்ரீ யோகர்சுவாமிகளின் அருட்கடாட்சமும் பாடசாலைக்கு கிடைத்தமையே காரணமென்பர். இவர் காலத்தில் கல்லூரி மாணவர்கள் பலர், விவேகானந்தா பரீட்சையில் பரிசில்கள் பலவற்றை பெற்றுக்கொண்டனர். மேற்பிரிவில் இருமுறை இம்மாணவர்கள் தங்கப்பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

உடையாரவர்கள் முதுமையடைந்து மறைந்த பின்னர் 1920ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை கல்லூரியை நிர்வகிக்கும் பொறுப்பை அவருடைய மகன் திரு நா.அ.சுப்பையா அவர்கள் ஏற்றுக்கொண்டார். இப்பாடசாலையில் அன்பும் பரிவும் நிறைந்த ஆசிரியராய் உரிமையாளராய், முகாமையாளராய் இருந்து இவராற்றிய பணி அளப்பெரியது. முயன்று கற்றதை மற்றவருக்கு எடுத்துரைக்கும் ஆற்றல் நிறைந்தவராக விளங்கிய நா.அ.சுப்பையா அவர்கள்

குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்
அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே”

என்னும் நன்னூலாரின் கூற்றுக்கமைய சிறந்த ஆசிரியனாகவும் துலங்கினார். நல்லாசாரமிக்கவராகவும் நன்மாட்சிமை கொண்டவராகவும் இடிந்துரைத்து மாணவர்களை நல்வழிப்படுத்துபவராகவும் விளங்கிய சுப்பையா அவர்கள் தந்தையைப் போலவே கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தார். அன்னாரின் தொண்டும் புகழும் கல்லூரியை இற்றை வரை மங்காது நிலைபெறச்செய்துள்ளது.

பெண்பிள்ளைகளையும் இணைத்துக் கல்வி பயிற்றப்படவேண்டும் என்ற அவா பாடசாலைச் சமூகத்துக்கு இருந்தமையால் 1929ஆம் ஆண்டில் இருந்து பெண்களும் இப்பாடசாலைக்கு உள்வாங்கப்பட்டனர். இதற்கு கால்கோலிட்டவராக சின்னத்தம்பி அவர்களே காணப்படுகிறார். இவர் இப்பாடசாலையை அளவெட்டி கலவன் ஆங்கிலப் பாடசாலை என பதிவு செய்ததோடு நில்லாது யு.ஊ.கூல் என்பவரை பெண்ணாசிரியராகவும் நியமித்தார். மாணவர் மத்தியில் நிலையான மதிப்பார்ந்த சேவையை வழங்கிய சின்னத்தம்பி அவர்கள் 1939ஆம் ஆண்டு வயதின் மூப்பின் காரணமாக இளைப்பாறினார். இவருடைய காலப்பகுதியில் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த ஆசிரியர்களாக திரு சே.தியாகராசா, திரு த.பொன்னம்பலம், திரு ச.பொன்னம்பலம், திரு வெ.பரநிருபசிங்கம், திரு வ.தில்லைநடேசம்பிள்ளை, திரு மா.பீதாம்பரம், திரு மு.மயில்வாகனம், திரு ச.சி.சின்னத்தம்பி, திரு வ.கதிரேசு, திரு இ.வைத்தியிங்கம், திரு ஆ.ளு.கந்தையா, திரு ஆ.வேலுப்பிள்ளை, திரு தி.செல்லத்துரை, திரு ச.சிதம்பரப்பிள்ளை, திரு வே.சந்திரகேரா முதலியோர் காணப்பட்டனர்.

திரு த.சின்னத்தம்பி ஆசிரியர் ஓய்வுபெற்றபின்னர் காரைநகர் திரு P.நவரத்தினம் ஆ.யு. அவர்கள் தலைமை ஆசிரியராக இணைந்து கொண்டார். இவர் ஒரு வருடகாலம் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார். இவருடைய எளிமையான வாழ்வும் கண்ணியமான நடத்தையும் பாடசாலை சமூகத்தால் சிலாகித்துப் பேசப்பட்டன. ஊரவரின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்ற தலைமையாசானாக இவர் விளங்கினார்.

திரு P.நவரத்தினம்

திரு P.நவரத்தினம்

1940 ஆம் ஆண்டு திரு ளு.கிரு~;ணசாமி ஐயர் அவர்கள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பரந்த அறிவும் தயாளசிந்தனையும் நிறைந்தவர். பிராமணர் ஆகையால் ஆசாரசீலராகவும் விளங்கினார். அதிகார தோரணையோ ஆடம்பரமோ இன்றி கல்லூரியை சிறப்பாக ஏழாண்டு காலம் தொடர்ச்சியாக நடாத்தினார். தலைமை ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் திரு கிருஸ்ணசாமி ஐயர் விலகிச் செல்ல அவ்விடத்துக்ககு இவர் அதிபராக நியமிக்கப்பட்டார்.

 

 

திரு கிருஸ்ணசாமி ஐயர்

திரு கிருஸ்ணசாமி ஐயர்

தலைமையாசிரியர் திரு த.சிதம்பரப்பிள்ளை அவர்கள் மாணவர்களாலும் பெற்றோர்களாலும் பொன்னையா மாஸ்டர் என அழைக்கப்பட்டவர். அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் நு.ளு.டு.ஊ படிப்பை முடித்து ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் சேர்ந்து 1928இல் கேம்பிறிச் சீனியர் பரீட்சையில் தேற்றியவராகவும் காணப்பட்டார். பின்னர் அளவெட்டி ஆங்கில பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்தார். விரைவில் ஆங்கில ஆசிரியதராதரப் பரீட்சையிலும் சித்தியடைந்தார். ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம், சமயம், கணிதம் பாடங்களைக் கற்பிப்பவராகவும் காணப்பட்டார்.இவருடைய காலத்தில் இப்பாடசாலையில் எஸ்.எஸ்.சி மாணவர்களுக்குரிய வகுப்புக்களும் தொடங்க்கப்பட்டன. இவரது முயற்சியால் பிரார்த்தனை மண்டபமும் கட்டப்பட்டது. உயிரியல் , ஆங்கிலப்பாடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆசிரியர்களும் வந்து அளவெட்டியில் தங்கியிருந்து கற்பித்தனர்.

 

த.சிதம்பரப்பிள்ளை

த.சிதம்பரப்பிள்ளை

1944 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை கல்லூரியை நிர்வகித்து நடாத்திய பெருமை திரு சுப்பையா அவர்களின் மகன் திரு. க.சிவசுப்பிரமணியம் அவர்களைச் சாரும். நிறைந்த கல்வி அறிவுடையவராகவும் நெறிதிறம்பா மாண்புடையவராகவும் காணப்பட்ட சிவசுப்பிரமணியம் அவர்கள் மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பனவற்றை ஊட்டி அவர்களை நல்லவராகவும் பண்புடையவராகவும் அறிஞராகராகவும் ஆக்கிக் காட்டியவர். பாடசாலையின் அதிபராகச் சிதம்பரப்பிள்ளை கடமையாற்றிய காலப்பகுதியில் உப அதிபராக சிவசுப்பிரமணியம் அவர்கள் இணைந்துகொண்டார். 1945ஆம் ஆண்டு யூலைமாதம் அரசசபையில் இலவசக்கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1945 ஒக்டோபர் முதல்தேதி அச்சட்டம் அமுலுக்கு வந்தபோது நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் அதனால் பயன்பெற்றனர். அளவெட்டி கலவன் ஆங்கிலப் பாடசாலையிலும் மாணவர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் பாடசாலையில் எஸ்.எஸ்.சி வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன.

க.சிவசுப்பிரமணியம்

க.சிவசுப்பிரமணியம்

அவர் தந்தையைப் போலவே சிவசுப்பிரமணியம் அவர்கள் உரிமையாளராகவும் ஆசிரியராகவும் முகாமையாளராகவும் உபஅதிபராகவும் அதிபராகவும் இருந்து கால் நூற்றாண்டு காலம் உழைத்ததன் பயனாக இன்று அருணோதயா ஒரு முதன்மையான கல்லூரி விளங்குகின்றது. திரு சு.சிவசுப்பிரமணியம் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு கற்கச் சென்ற காலத்தில் குறிப்பிட்ட சிறிதுகாலம் க.சின்னத்தம்பி அவர்களும் இ.வைத்தியலிங்கம் அவர்களும் முகாமையாளராகக் கடமையாற்றினர். 1949ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரியின் வளர்ச்சி தொடங்குகின்றது.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவிட்டு விஞ்ஞானப்பட்டதாரியாக வந்த திரு சு.சிவசுப்பிரமணியம் அவர்கள் உபஅதிபராக இணைந்து கல்லூரிக்கு அளப்பெரிய சேவையாற்றினார். 1950களில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பலர் சித்தியடைந்தனர் 1951ஆம் ஆண்டில் இப்பாடசாலை இரண்டாந்தர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. அப்போது விஞ்ஞானப்பட்டதாரியாக இருந்த சு.சிவசுப்பிரமணியம் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட உபஅதிபராக சிதம்பரப்பிள்ளை கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் ஸ்தாபகரை நினைவுகூருமுகமாக இக்கல்லூரிக்கு அருணோதயக்கல்லூரி என்று பெயரும் சூட்டப்பெற்றது. பாடசாலையில் விஞ்ஞானகூடங்கள் கட்டப்பட்டு பௌதிகவியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களும் கற்பிக்கப்பட்டன. அத்தோடு பாடசாலையில் நூல்நிலையமும் கட்டப்பட்டு பாடங்களுக்குரிய நூல்களும் கொள்வன செய்யப்பட்டன. பாலர் வகுப்புக்களும் இங்கேயே ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற பாடசாலைச் சமூகத்தின் கோரிக்கைக்கிணங்க பாடசாலைக் கட்டடங்களும் கட்டப்பட்டன. பாடசாலையில் விளையாட்டு மைதானமும் விஸ்தரிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில் அருணோதயக்கல்லூரி அடைந்த உயர்ச்சி மிகவும் வியக்கத்தக்கது. பல முறை எமது கல்லூரி உதைபந்தாட்டக்குழு முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. ஹொக்கி விளையாட்டிலும் பாடசாலை வருடாவருடம் வியக்கத்தக்க வெற்றிகளை அடைந்திருக்கின்றது. 1968இல் பதினேழு வயதுக்குட்பட்டோர் பிரிவில் அருணோதயக்கல்லூரி அணியே முதலிடத்தைப் பெற்றது. சங்கீதத்துறையில் முதன்மைக்கு விருதாகக் கருதப்படும் லேடி இராமநாதன் கேடயத்தைப் பெற்ற பெருமையும் பாடசாலைக்குண்டு. 1953 தொடக்கம் யாழ்ப்பாணத்து 37வது சாரணர்படை கல்லூரியில் தொண்டாற்றியது. எந்தச் சாரண வீரரும் பெறுதற்கரிய அதி உயர்ந்த இராணிச் சாரணச் சின்னத்தை 1968இல் பெற்றமை பாராட்டுக்குரியது. சித்திரக்கலையிலும் அருணோதயக்கல்லூரி சாதனைகள் பலவற்றைத் தனதாக்கிக்கொண்டது. எமது பாடசாலை மாணவர்களின் முயற்சி எல்லோராலும் போற்றப்பட்டது. வட இலங்கைச் சங்கீதசபையின் பரீட்சைகளில் எமது பாடசாலை எல்லாப்பிரிவுகளிலும் எமது பாடசாலை மாணவர்கள் பலர் வருடாவருடம் தோற்றிச் சித்தியெய்தினர்.இக்காலப்பகுதியில் இவருக்கு உதவியாளராக இ.இராசையா, செ.மயில்வாகனம் முதலியோர் கடமையாற்றியதால் கல்லூரி தலைநிமிர்ந்து நின்றது. பாடசாலைக் கீதத்தை ஆசிரியர் அமரர் ச.பொன்னபலம் அவர்கள் இயற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1968ஆம் ஆண்டு முதல் முதலாந்தர அதிபராக உயர்வு பெற்ற சிவசுப்பிரமணியம் அவர்கள் விக்டோரியாக் கல்லூரிக்கு மாற்றலாகிச் செல்ல மீண்டும் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 09.09.1969 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பணிபுரிந்தார். அவ்வருடம் அருணோதயக்கல்லூரி பவளவிழாவையும்; சிறப்பாகக் கொண்டாடியது.

 

சிதம்பரப்பிள்ளை அவர்களின் ஓய்வைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு திரு அ.விஸ்வநாதன் பதிலதிபராகக் கடமையாற்றினார். இக்காலத்தில் க.பொ.தர சாதரணபரீட்சையிலும் வடமாகாண ஆசிரியர் சங்க பரீட்சையிலும் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றார்கள். பின்பு திரு. சு.ஆனந்தகுமாரசாமி அவர்கள் அதிபராகப் பணியாற்றினார். இவர் கல்லூரி அபிவிருத்திக்கு பல வழிகளிலும் முயற்சி செய்தார்.இவர்காலத்தில் கொழும்பில் அருணோதயா அபிவிருத்திச்சபை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஆனந்தகுமாரசாமி இடமாற்றம் பெற்றார். அப்பொழுது சிறிதுகாலம் திரு.மு.கதிர்காமசேகரம் அவர்கள் பதிலதிபரானார். பாடசாலையில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதிலும் பாடசாலைக் கருமங்களை செவ்வனே ஆற்றுவதிலும் வல்லமையான அதிபராக இவர் விளங்கினார்.

திரு M. கதிர்காமசேகரம்

திரு M. கதிர்காமசேகரம்

 

அவரையடுத்து அவரிடம் படித்தவராகிய சாவகச்சேரியைச் சேர்ந்த கவிஞர் வி.கந்தவனம் சொற்பகாலம் அதிபரானார். இவருடைய முயற்சியால் கல்லூரியில் ஆரம்ப பாடசாலைக் கட்டடம் புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டது. மாணவருக்கு தமிழ்பாடத்தை கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் இவர் விளங்கினார்.

 

 

 

 

இவர் பதவியேற்று சிறிதுகாலத்தில் அரசினரால் இடமாற்றம் செய்யப்பட்டார். இவருடைய இடமாற்றம் மாணவர்க்கும் பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கந்தவனம் அவர்களின் இடமாற்றத்தை அடுத்து திரு.மு.சிவராசரத்தினம் (ஆ.யு) அதிபரானார். இவர் காலத்தில் பாடசாலையில் மாணவர்கள் பலர் மிகத்திறமையான சித்தியைப் பெற்றார்கள்.

1978இல் திரு.வி.சிவசுப்பிரமணியம் அதிபரானார். இவர் காலத்தில் வளர்ந்தோர் கல்வித்திட்டம் ஆரமபிக்கப்பட்டது. பல ஆண்டு காலம் நடை பெறாமலிருந்த க.பொ.த உயர்தர விஞ்ஞான வகுப்புகளுக்குப் புத்துயிர் கொடுத்து இயங்கச் செய்த பெருமை இவருக்கிருந்தது. திரு. சின்னப்பு தம்பதியினரின் புலமைப்பரிசில்திட்டத்தைப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்திய பெருமையும் இவருக்குரியது. அளவெட்டியில் பிறந்து வளர்ந்து மலேசியாவில் வாழ்ந்த திரு. க. சின்னப்பு அவர்கள் கீழ்வகுப்புத் தொடக்கம் க.பொ.த. உயர்தர வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மை பெறும் மூவருக்கு வட்டிப் பணத்திலிருந்து பரிசு வழங்குவதற்கென ஒரு பெரு நிதியை இராமகிரு~;ண மி~னிடம் முதலீடு செய்தார். வருடந்தோறும் பரிசளிப்பு விழா சிறப்புற நடப்பதற்கு வேண்டிய நிதியும் அந்த வட்டிப் பணத்திலிருந்து கிடைப்பதற்கு வழிசெய்தார். திரு. சின்னப்பு அவர்களைப் பின்பற்றி அவரது மைத்துனர் பொன்னையா அவர்களும் கல்லூரிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாவை முதலீடு செய்துள்ளார். இம்முதலீட்டின் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் பல்கலைக் கழகம் செல்லும் வசதி குறைந்த மாணவருக்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.

01.08.1980இல் திரு. ந.சிவபாதம் அவர்கள் அதிபரானார். இவர் காலத்தில் கல்லூரிக்கு மின்சார வசதி தொலைத்தொடர்பு வசதி என்பன கிடைத்தன. இரு மேல்மாடிக் கட்டடங்கள் அமைக்கும் பணியும் ஆரம்பமானது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகாரணமாக இராணுவத்தினர் அளவெட்டிக் கிராமத்தை முற்றுகையிட்டபோது 15.06.1992இல் இக்கல்லூரி இடம்பெயர்ந்து இராமநாதன் கல்லூரியில் இயங்கியது. ஒரே பாடசாலையில் யாழ் யூனியன் கல்லூரியும் இயங்கியமையால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக க.பொ.த. உயர் தரத்துக்குரிய பாடங்கள் மாணவர்களுக்கு மாலையில் கற்பிக்கப்பட்டன.

 

திரு. அ.சிறிக்குமரன்

திரு. அ.சிறிக்குமரன்

இக்கட்டான கால கட்டத்தில் குறிப்பாக 1.10.93இல் திரு. ந. சிவபாதம் அவர்கள் பதவி உயர்வு பெற்றுச் செல்ல திரு. அ.சிறிக்குமரன் அதிபரானார். 01.01.1990 ஆம் ஆண்டு அளவெட்டி மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாக வலி வடக்கினைவிட்டு விட்டே இடம்பெயரவேண்டிய கட்டாய சூழலில் கல்லூரியின் முக்கிய ஆவணங்களைக் கொண்டு சென்று பாதுகாக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. 15.06.1992இல் எமது பாடசாலை இராமநாதன் கல்லூரியில் மாலைநேரப் பாடசாலையாக இயங்கியது. இக்காலத்தில் மாணவர்தொகை 400 ஆகக் குறைவடைந்தது. 1994ஆம் ஆண்டு எமது பாடசாலையின் நூற்றாண்டு விழாவை சொந்த இடத்தில் கொண்டாட முடியாதநிலை காணப்பட்டது. உக்கிரமான சமர் நடந்து கொண்டிருந்தபோது கல்லூரியின் அதிபரோடு திரு கி.மகேந்திரராசா, திரு ம.பத்மநாதன், திரு த.நடராஜா, திரு பிரபாகரன் ஆசிரியர்கள் கடும் பிரயாசைப்பட்டு ஆவணங்களை சாவகச்சேரி றிபேக் கல்லூரிக்கு எடுத்துச் சென்று பாதுகாத்தனர். ஆயினும் நூலக புத்தகங்கள், விஞ்ஞானகூட உபகரணங்கள், விஞ்ஞானகூடத்தில் பயன்படுத்தப்பட்ட பெரியமேசைகள் முதலானவற்றை எடுத்துச் செல்லமுடியாத நிலையும் காணப்பட்டது. இடம்பெயர்ந்து அங்கு சென்ற ஆசிரியர்கள் பாடசாலையை அங்கும் வெற்றிகரமாக நடாத்தினார்கள்.15.06.1992 முதல் 01.10.1997 வரை யுத்தசூழல் காரணமாக பாடசாலை பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தமையால் மாணவர் தொகை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது.

யாழ் அருணோதயக் கல்லூரியில் இருபத்தைந்து வருடங்கள் சேவையாற்றியவர் கி.மகேந்திரராசா அவர்கள். 01.01.1982 தொடக்கம் ஆசிரியராக்கடமையாற்றிய மகேந்திரராசா அவர்கள் 01.01.1985 முதல் 01.09.1991 ஆம் ஆண்டு வரை இப்பாடசாலையில் பகுதித் தலைவராகக் கடமையாற்றினார். பின்னர் 10.03.1997 வரை பிரதி அதிபராகப் பதவி வகித்தார். 01.07.1997இல் யாழ். இந்துக்கல்லூரிக்கு திரு. அ. சிறிக்குமரன் அவர்கள் அதிபராக மாற்றலாகிச் செல்ல திரு. கி. மகேந்திரராசா அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அக்காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த யாழ் மாவட்டப் பாடசாலைகள் மீள இயங்கத்தொடங்கின.

அருணோதயக்கல்லூரியும்; 300 மாணவர்களுடன் மீண்டும் இராமநாதன் கல்லூரியில் இயங்க ஆரம்பித்தது. பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டவராகக் காணப்பட்ட கி.மகேந்திரராசா அவர்கள் மாணவர்களின் ஒழுக்கத்திலும் அதிக அக்கறை காட்டினார். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் புலமைப் பரிசில் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

வறிய மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளைத் தானே தன் சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்தார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலில் பாடசாலை இராமநாதன் கல்லூரியில் நானூறு மாணவர்களுடன் இயங்கியது. 1.10,97இல் அருணோதயக்கல்லூரி அளவெட்டியில் பழைய இடத்தில் இயங்கத் தொடங்கியது. சொந்த இடத்திற்கு வந்தபோது அதேயளவு மாணவர்களை மட்டுமே கொண்டிருந்த அருணோதயக் கல்லூரி இவருடைய அர்ப்பணிப்பாலும் நிர்வாகச் செயற்றிரனாலும் 1024 பிள்ளைகளைக் கொண்டதாக மாறியது. நேர்மையும் தூயசிந்தனையும் கொண்ட அதிபராக இவர் இருந்தமையால் பாடசாலையை செம்மையாக வழிப்படுத்தினார். பூர்த்தி செய்யப்படாமலிருந்த அருணாசல மாடிக் கட்டடம் இவருடைய காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுக் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

ஆரம்பத்தில் அக்கட்டிடத்திலேயே நூல் நிலையமும் இயங்கியது. மாணவர்களின் தொகைகூட புதிய ஆசிரியர்கள் உள்வாங்கப்பெற்றனர். 2000ஆம் ஆண்டு க.பொ.உயர்தரப் பரீட்சையில் இருபது மாணவர்கள் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பெற்றனர். 2002இல் வர்த்தகப்பிரிவில் ஒரு மாணவன் 3யு சித்தியைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டான். 2001 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்களும்; 2004 ஆம் ஆண்டு ஆறு மாணவர்களும் சித்தியடைந்தனர். அதிபர் அவர்களின் தொடர்ச்சியான ஊக்கத்தினாலும் ஆர்வத்தினாலும் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். இவருடைய காலத்தில் உதைபந்தாட்ட அணி மாகாணம் வரை சென்று வெற்றியீட்டியது. காத்தவராஜன் சிந்துநடைக்கூத்தும் இரு தடவைகள் மாகாணம் வரை சென்று வெற்றியீட்டியது. இடம்பெயர்வால் சீரழிந்திருந்த விளையாட்டு மைதானமும் இவருடைய காலத்தில் புனரமைக்கப்பட்டது. கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியால் நீர்த்தாங்கி ஒன்றும் பாடசாலையில் அமைக்கப்பட்டு குழாய் மூலம் குடிநீர் மாணவருக்கு வழங்கப்பட்டது. அத்தோடு நீண்டகாலமாகக் கல்லூரி விளையாட்டு மைதானத்துடன் இணைக்கப்படவேண்டும் என்று பலரும் விரும்பிக் கொண்டிருந்த கிழக்குப்புற காணியும் திரு. ஆ. பொன்னம்பலம் குடும்பத்தினரின் ஆதரவால் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றது. மேலும் புதியமேல் மாடிக் கட்டடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாத நிலையில் மகேந்திரராசா அவர்கள் 2006இல் திடீர் சுகவீனமுற்று பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்ல இக்கிராமத்தைச் சேர்ந்த திரு. நாகலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் பாடசாலையின் அதிபர் பதவியை 23.03.2007இல் ஏற்றுக்கொண்டார். அளவெட்டிக்கிராமம் கண்டெடுத்த ஆறாவது அதிபர் இவரேயாவார். இவர் பதவியேற்கும்போது கல்லூரியில் ஆசிரியர் வளப்பற்றாக்குறை குறைவாகவே காணப்பட்டது. வளம்பற்றாக்குறை காணப்பட்டாலும் கல்லூரியைச் சீரும் சிறப்புமாக நிர்வகித்த பெருமை இவரையே சாரும். இவருடைய காலத்தில் வலிகாமத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் பேர் சொல்லும் பாடசாலையாக வளர்ச்சி கண்டது. அளவெட்டி என்றாலே அருணோதயா என்று கூறுமளவுக்கு பாடசாலையை அறிவுத்திறன் கொண்ட ஆற்றலமிக்க செயல்நிறுவனமாக பாடசாலையை மாற்றிய பெருமை நா.கேதீஸ்வரன் அவர்களையே சாரும். பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருந்த மகேந்திரராசா மண்டபத்தை பூர்த்தி செய்து கல்லூரியைப் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கச் செய்த பெருமையும் அதிபர் அவர்களையே சாரும். 2007 ஆம் ஆண்டு புதிய கட்டடத்தை திறந்த அதிபர் தன்னுடைய நிர்வாக அமைப்புக்களையும் அலுவலகத்தையும் அப்புதிய கட்டடத்திற்கு மாற்றினார். பிரதான வீதியிலிருந்து அலுவலகம் வரை வீதி ஒன்றினையும் அமைத்த பெருமை அதிபரையே சாரும். அத்தோடு மைதானத்தைச் சுற்றிப் பூந்தோட்டமும் அமைக்கப்பட்டது. பாடசாலையின் கவின்நிலையைப் பேணிய அதிபராகவும் நா.கேதீஸ்வரன் காணப்பட்டார். கல்லூரியின் தோற்றப்பொலிவுக்கு அரும்பாடுபட்டுழைத்தார்.

2006ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் எவரும் சித்தியடையாதிருந்த வேளையில் எமது கல்லூரியில் 2007ஆம் ஆண்டு ஆறுபேர் சித்தியடைந்தார்கள். இவ்வளர்ச்சி 2010இல் பதினாறாகவும் 2012இல் இருபதாகவும் உயர்ந்து இன்று இருபத்தேழினைத் தொட்டு நிற்கிறது. 2020ஆண்டில் எமது கல்லூரியில் நாற்பது மாணவர்கள் புலமை பரீட்சையில் சித்தியடைந்து புதிய சாதனையும் படைத்தமையும் இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

2006ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 35 வீதமாகக் காணப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் 2007ஆம் ஆண்டு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த காலப்பகுதியில் இது படிப்படியாக உயர்ந்து சென்றது. 2014ஆம் ஆண்டு 88 வீதமாக அதிகரித்த க.பொ.த பரீட்சைப் பெறுபேறு 2018 இல் 91வீதமாகவும் 2019இல் 94 வீதமாகவும் உயர்ந்து 2021 இல் 89 வீதமாகவும் காணப்படுகிறது.

வர்த்தகப் பிரிவில் இரு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘யு’ தரச் சித்தியடைந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு அம்பலவாணர் லிதர்சினி, 2012இல் பாலக்கிரு~;ணன் குஜாலா, மகேந்திரன் மதீபன், 2013இல் பாலேந்திரன் பரதன் முதலியோரும் வர்த்தகத்தில் சித்திபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு 74வீதமாகக் காணப்பட்ட வர்த்தகப் பாட சித்திவீதம் 2021இல் 100வீதத்தை தொட்டு நிற்கிறது.

2012இல் கலைத்துறையைச் சேர்ந்த ஜெயவதனன் காயத்திரி, 2013இல் உதயதாசன் சுகந்தன் முதலான மாணவர்களும் ‘3யு’ சித்தியைப் பெற்றிருந்தமையும் நினைவுகூரத்தக்கது. 2014இல் 75வீதத்தை தொட்ட கலைத்துறை 2021இல் 80வீதத்தை எட்டிநிற்கிறது.

2014 ஆம் ஆண்டு 43வீதமாகக் காணப்பட்ட கணிதத்துறை இன்று 80வீதத்தைத் தொட்டுள்ளது. 2014 இல் உயிரியல் விஞ்ஞானத்துறையின் சித்திவீதம் 29ஆகக் காணப்பட்ட நிலையில் 2019இல் அது 100வீதத்தை தொட்டது. ஆயினும் 2021இல் இச்சித்திவீதம் 70ஆக குறைந்தது.

2008ஆம் ஆண்டு நடைபெற்றதமிழ் மொழித் தினப் போட்டியில் மாணவர்கள் இருவர் மாகாண மட்டம் வரை சென்று மாகாணமட்டத்தில் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர். அதேபோல ஆங்கிலதினப் போட்டியில் ஆங்கிலக்கவிதை கூறலில் மாணவி ஒருவர் மாகாண மட்டம் வரை சென்றுள்ளார். அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க 2008ஆம் ஆண்டு பாடசாலைக்கான கொடிகீத்ததைப் புலவர் திரு ம.பார்வதிநாதசிவம் அவர்கள் எழுதித்தந்தார். இக்கொடிகீதத்தை புலவரிடம் இருந்து எழுதி வாங்கிய பெருமை தமிழ் ஆசிரியர் கா.சசிதரன் அவர்களையே சாரும்.
இவரது காலத்தில் கோட்டமட்டம், வலயமட்டம், மாவட்ட மட்டத்திலும் விளையாட்டுத்துறையிலும் பாடசாலை மாணவர்கள் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தனர். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மட்ட மெய்வல்லுநர் போட்டியில் அருணோதயக்கல்லூரி பத்து முதலிடங்களையும் ஆறு இரண்டாமிடங்களையும் இரண்டு மூன்றாமிடங்களையும் பெற்றுக் கொண்டது. யாழ் மாவட்டத்தில் பிரபலமான பல தேசிய பிரபல பாடசாலைகள் இருந்தும் அருணோதயக் கல்லூரி மெய்வல்லுநர் போட்டியில் சிறப்பான இடத்தினைப் பெற்றதற்கு கடின உழைப்பும் வீரர்களின் தொடர்ச்சியான பயிற்சியுமே காரணமாகும். 2007இல் 21 வயதுப் பிரிவில் செல்வன் செ.நவநீதன் என்ற மாணவன் கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதகத்தினை வென்று சாதனை படைத்ததைப் போன்று 2008ஆம் ஆண்டு அமைச்சூர் மெய்வல்லுனர் சம்மேளனம் நடாத்திய தேசியமட்ட கனி~;ட மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதுப்பிரிவு கோலூன்றிப் பாய்தலில் செல்வன் கோ.கணதீபன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினை வென்றார். 2008 ஆம் ஆண்டு 19வயதுப்பிரிவு உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்தில் காலிறுதிவரை முன்னேறிச் சென்றுள்ளமையும் இங்கு நினைவுகூரத்தக்கது. இதுபோலவே 2007ஆம் ஆண்டில் தமிழ் மொழித் தின இலக்கணப் போட்டியில் செல்வி கு.யஸ்மின் கிறிஸ்ரெலா என்ற மாணவி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுச்சாதனை படைத்தார்.

2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி 1யுடீ பாடசாலையாக உத்தியோகபூர்வமாகத் தரமுயர்த்தப்பட்டமையால் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் மாணவர்கள் 2013ஆம் ஆண்டளவிலேயே உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார்கள். அக்காலப்பகுதியில் முதன்முறையாக கணிதப்பிரிவில் க.பொ.த.உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய செல்வி இ.கீர்த்தனா 2யுஇ டீ சித்தியைப் பெற்று பொறியியல் துறைக்கு உள்வாங்கப் பெற்றார். 2010 ஆம் ஆண்டு திருமதி Ñந்தி அமிர்தலிங்கம் அவர்கள் தனது தந்தையாரான திரு மு.கதிர்காமசேகரம் அவர்களின் நினைவாக மூத்த சகோதரர் க.ரவீந்திரன் அவர்களின் உதவியுடன் திறந்தவெளி அரங்கினை நிர்மாணித்துக் கொடுத்தார். இதன் பயனாக பரிசளிப்புவிழா தொடக்கம் கலைநிகழ்வுகளுக்கும் இவ்வரங்கு களம் அமைத்துக் கொடுத்தது. இதனால் பாடசாலையின் பௌதீக வளம் வளர்ச்சி கண்டது. 2011ஆம் ஆண்டு தற்போதைய விஞ்ஞான ஆய்வுகூட மேல்மாடிக் கட்டடத்தையும் திறந்து வைத்த பெருமையும் நா.கேதீஸ்வரன் அவர்களையே சாரும்.

2013 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க இணைப்பாளராக இருந்த செல்லையா ஸ்ரீகாந்தன் அவர்களால் தற்போது இயங்கும் நூலகத்தின் கீழ்த்தளக் கட்டித்தரப்பட்டது. 25’70’ நீளமுடைய இக்கட்டடம் 15.06.2014 அன்று அவரது தந்தையாகிய ஓய்வுபெற்ற ஆசிரியர் மு.செல்லையா என்பவரால் திறந்து வைக்கப்பட்டது பெரிய நூலகமாக இக்கட்டடம் மாற்றியமைக்கப்பட்டது. எமது பாடசாலை நூலகம் 3270 நூல்களையும் ஏராளமான சஞ்சிகைகளையும் உள்ளடக்கியுள்ளது. இன்று வலிகாம வலயத்தில் இயங்கும் பாடசாலைகளுக்குள் எமது நூலகம் சிறந்த பணியை ஆற்றி வருவதால் தொடர்ந்தும் பல தடவைகள் பல விருதுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது. .2019 ஆம்ஆண்டு கல்வி அமைச்சின் ஆவண சபையால் சிறந்த நூலகமாக எமது பாடசாலையின் நூலகம் தெரிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு அளவெட்டி பிரதேச சபையால் பாடசாலைகளுக்கான சிறந்த நூலகமாகவும் எமது நூலகம் தெரிவுசெய்யப்பட்டது.இதற்கு முன்னின்று உழைத்த ஆசிரியர்களாள திருமதி விஜயயாழினி ரவீந்திரன் அவர்களையும் திருமதி ச.சத்தியசீலன் அவர்களையும் கூறலாம்.

அதன் மேற்தளம் லண்டன் பழைய மாணவர் சங்கத்தால் கட்டி தரப்பட்டது. சின்னப்பு குமாரசிங்கம் ஞாபகார்த்தமாக அமெரி

க்காவைச்சேர்ந்த பொறியியலாளர் குமாரசிங்கம் சூரி சூரியகுமாரால் 3.6மில்லியன் செலவில் கணனி ஆய்வுகூடத்துக்குத் தேவையான 41கணனிகளும் அதற்கான வலையமைப்பு உபகரணங்களும் வாங்கிக்கொடுக்கப்பட்டன. தனிப்பட்டரீதியில் ஒவ்வொரு மாணவனும் ஆய்வுகூட செயற்பாட்டை முன்னெடுக்க இந்நடவடிக்கை வரப்பிரசாதமாக அமைந்தது.

 

அருணாசல உடையார் மண்டபத்தையும் அலுவலகத்துக்கு மேல் அமைந்திருக்கும் மண்டபத்தையும் பாடசாலை மாணவர்கள் கற்பதற்குரிய ஒன்பது வகுப்பறைகளாக மாற்றிய பெருமையும் எமது கல்லூரியின் அதிபர்  நா.கேதீஸ்வரன் அவர்களையே சாரும்.\

இன்று மாணவர்கள் விரும்பிக் கற்கும் கணனி அறையாக இது இயங்குகிறது. அக்காலப்பகுதியில் இவரது சேவையைப் பாராட்டி இலங்கை அரசு குரு பிரதீபா விருதினை வழங்கி கௌரவித்தது. கல்லூரியின் வடக்குப்புறத்திலுள்ள 22 பரப்புக் காணி, பழைய மாணவர் சங்க கிளைகளின் நிதியுதவியுடன் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்புடனும் 2014 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கொள்வனவு செய்யப்பட்டு கல்லூரி வளாகம் விஸ்தீரணம் செய்யப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஆரம்ப பிரிவுக்கான இருமாடிக்கட்டடம் அதிபர் அவர்களின் முயற்சியினால் மாகாணசபையால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இக்கட்டடம் 135 அடி நீளத்தையும் 25 அகலத்தையும் கொண்டது. 2017ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் 60அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட இரு மாடிக்கட்டடமும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

2019 இல் 210’ ù 80’ கொண்ட மாநாட்டு மண்டபமும் கட்டப்பெற்றது. வலிகாம வலயத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு பார்வையாளரை உள்ளடக்கூடிய மிகப்பெரிய மண்டபமாக இது காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியிலே 130 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட மூன்று மாடிக்குரிய கட்டடம் ஒன்றுக்கான அடித்தளம் இடப்பட்டு இன்று கீழ் பகுதி வகுப்பறைகள் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் இயங்குகிறது.

மனிதநேயமும் அர்ப்பணிப்பும் ஆற்றலுமிக்க அதிபரையும் ஆசிரியர்களையும் கொண்ட அருணோதயக்கல்லூரி அறிவுருவாக்கத்திலும் பண்புசார்விருத்தியிலும் தனித்து துலங்குகிறது. விசேட அறிதிறன்களுக்கூடாக சமூகத்துக்குப் பொருத்தமுடைய மாணவர்களை உருவாக்கும் பாடசாலைகளில் முன்னணிப்பாடசாலையாகத் திகழும் அருணோதயக்கல்லூரி சிறந்த பௌதீக வளங்களையும்; நன்நடத்தை மிக்க மாணவர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

மாணவர்களின் திறனக்களைக் கண்டறிந்து அதனைத் திட்டமிட்டு வளர்ப்பதன் வாயிலாகவும் விருத்திமிக்க சிறந்த திட்டமிடலினூடாகவும் துரித முன்னேற்றத்தை எட்டியுள்ள இப்பாடசாலை ஆலமரம் போல் விழுதுகளாய் நின்று நிலைத்து தன் சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.